* அதிஉயர் பாதுகாப்பு வலயத்திற்குள் செல்ல விசேட அடையாள அட்டை
"சார்க்' மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் கொழும்பில் விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் அதிஉயர் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் நுழைவோருக்கு விஷேட அனுமதி அட்டைகள் வழங்கப்படுவதுடன் அப்பகுதிக்குள்ளான நடமாட்டத்தை முடிந்தவரை தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்கப்படவுள்ளனர்.
இந்த அதிஉயர் பாதுகாப்பு வலயத்திற்குள் வாகனப் போக்குவரத்தும் கட்டுப்படுத்தப்படவுள்ளது.
விஷேட பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஹில்ரன் ஹோட்டல், பழைய பாராளுமன்ற கட்டிடம் மற்றும் செரமிக் சுற்று வட்டப் பகுதிக்குச் செல்வோரே இந்த விஷேட அனுமதி அட்டையைப் பெற வேண்டும்.
இதேநேரம், "சார்க்' மாநாட்டின் பாதுகாப்பை முன்னிட்டு கொழும்பு நீர்கொழும்பு வீதியிலும் அதனை அண்டிய பகுதியிலும் குடியிருப்பவர்களின் விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாபொல பகுதியில் கொழும்பு நீர்கொழும்பு வீதியின் இரு மருங்கிலும் வசிப்போர் குறித்தும் வீடுகள், கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் குறித்தும் பொலிஸாரால் விபரங்கள் சேகரிக்கப்பட்டன.
அத்துடன், வீதியின் இரு மருங்கும் துப்புரவாக்கப்பட்டும் வருகிறது.