* "இந்தியா ஆயுதம் வழங்குவதை நிறுத்த வேண்டும்'
இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்குவதை இந்திய மத்திய அரசாங்கம் நிறுத்த வேண்டுமெனவும் முதலமைச்சர் கருணாநிதி இந்தப் பிரச்சினை தொடர்பாக தலையிட வேண்டுமெனவும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நேற்று திங்கட்கிழமை வலியுறுத்தியுள்ளார்.
தனது 54 ஆவது பிறந்த தினத்தை நீலாங்கரையிலுள்ள தனது இல்லத்தில் நேற்று கொண்டாடிய சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் தெரிவித்ததாவது;
"தமிழக மீனவர்களை இலங்கை இராணுவம் துன்புறுத்தி வருகிறது. இதற்காக நாங்கள் இலங்கைத் தூதகரத்திடம் மனு கொடுத்துள்ளோம். தமிழகத்தின் அருகில் தான் இலங்கை இருக்கிறது. அதனால், முதலில் அங்கு அமைதி திரும்ப வேண்டும்.
தமிழக முதலமைச்சர் இலங்கையில் அமைதி நிலவ முயற்சி செய்ய வேண்டும். இந்தியா இலங்கைக்கு ஆயுதம் அனுப்பக் கூடாது. இலங்கை மீனவர்களை இந்திய கடற்படை கைது செய்தால் உடனே விடுதலை செய்து விடுகிறார்கள். ஆனால், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அடித்து துன்புறுத்துகிறார்கள். இதற்குத் தீர்வு காணப்பட வேண்டும்.
தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. அல்லாத புதிய மூன்றாவது அணியை எனது தலைமையில் உருவாக்கி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை சந்திக்கப் போகிறோம்.
என்னுடைய பிறந்த தினத்தை முன்னிட்டு கட்சி வேறுபாடுகளை மறந்து பா.ஜ.க. மாநில தலைவர் இல.கணேசன், பொன். இராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஞானதேசிகன் எம்.பி., எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ. மற்றும் கலை உலகினர் எனக்கு தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தனர். நிரம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. இது இன்றைய அரசியல் சூழ்நிலையில் நல்ல பண்பாடாக இருக்கிறது.
நாளை (இன்று) சமத்துவ மக்கள் கட்சியின் முப்பெரும் விழா திருப்பூரில் நடைபெறுகிறது.
மக்களுக்கு தொலைநோக்குப் பார்வையுடன் அடிப்படை வசதிகள், சமச்சீர் கல்வியை கொடுப்பதோடு, வேலை வாய்ப்பை அதிகப்படுத்துவதன் எங்களின் நோக்கம்.
மக்கள் பார்த்துக்கிட்டிருக்காங்க. அவர்களை ஏமாற்ற முடியாது. சினிமாவில் வேண்டுமானால் நடிக்கலாம். அரசியலில் நடிக்க முடியாது.
நாங்கள் பராளுமன்றத் தேர்தலுக்காக இப்பொழுதே 22 வேட்பாளர்களைத் தேர்வு செய்து விட்டோம். நாங்கள் ஒத்தகருத்துடைய ஒரு அணியை உருவாக்குவோம்.
தி.மு.க., அ.தி.மு.க. அல்லாத ஒரு அணி என் தலைமையில் உருவாகும்.
என் தலைமையிலான புதிய அணியில் ஒருமித்த கருத்துள்ள தலைவர்கள் இணைவார்கள். அவர்கள் யார் யார் என்பதையெல்லாம் பின்னர் சொல்கிறேன்' என்றார் சரத்.
மனைவி ராதிகா சரத்குமாரும் இப்பேட்டியின் போது கலந்து கொண்டார்.