* கவாஸ்கர் பாராட்டு
இலங்கை டெஸ்ட் தொடரிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்ட தோனியின் முடிவு மிகவும் துணிச்சலானதென முன்னாள் கப்டன் கவாஸ்கர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இலங்கை செல்லும் இந்திய அணி முதல் கட்டமாக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் 23 ஆம் திகதி தொடங்குகிறது. இதற்கான அணியிலிருந்து ஒருநாள் போட்டிக்கான கப்டன் தோனி விலகிக் கொண்டார்.
தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்றதால் சிறிய ஓய்வு தேவைப்படுவதாக தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட பி.சி.சி.ஐ. இவரை அணியில் சேர்க்கவில்லை.
இந்தப் பிரச்சினை பெரிதானது. பண மழை பொழியும் ஐ.பி.எல். தொடரில் ஆர்வமாக இருக்கும் தோனி, டெஸ்ட் தொடரை மட்டும் புறக்கணிப்பதாக விமர்சிக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் தோனிக்கு கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
1970 களில் ஒரு வீரர் ஓய்வு கேட்டால் அவரை துரோகியை போல் பார்ப்பார்கள். தற்போது நிலைமை மாறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி கவாஸ்கர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது;
இலங்கை டெஸ்ட் தொடரிலிருந்து ஓய்வளிக்குமாறு கேட்ட தோனிக்கு அனுமதியளித்த பி.சி.சி.ஐ. செயல் பாராட்டுதலுக்குரியது. கடந்த ஓராண்டாக ஓய்வில்லாமல் ஆடிய அவருக்கு இது புத்துணர்ச்சியை அளிக்கும். உடல் மற்றும் மனரீதியாக சோர்வடைந்திருந்த தோனியின் முடிவு மிகுந்த துணிச்சலானது.
நல்ல நிலையிலுள்ள எந்த வீரரும், அணியில் உள்ள தனது நிலையான இடத்தை இப்படி அடுத்த வீரருக்கு விட்டுக்கொடுக்க மாட்டார்கள். கப்டன் மாற்றம் என்பது எல்லோரும் வரவேற்கக்கூடியதாக இருக்க வேண்டும்.
உதாரணமாக 1970 களில் பிரபலம் இல்லாதவர் பட்டோடி. 1971 இல் மேற்கிந்திய, இங்கிலாந்து பயணத்திற்கு பின் அதிகம் பேசப்பட்டார். ஆனால், தவறான முறையில் அஜித் வடேகரை கப்டனாக சபை நியமித்தது. பட்டோடிக்கு ஆதரவு மற்றும் நல்ல உடல்தகுதி இருந்தும் அவர் அணியிலிருந்து விலகினார்.
1970 களில் இருந்து 78 வரை "ஓய்வேயின்றி' டெஸ்ட் ஆடிக்கொண்டிருந்தோம். 18 ஆண்டுகளுக்கு பிந்தைய பாகிஸ்தான் தொடர், உள்நாட்டு தொடர், நீண்ட தொடர் முடிந்ததும் ஒருமாத இடைவெளியில் இங்கிலாந்து தொடர், 1979 இல் உலகக் கிண்ணப் போட்டி, அவுஸ்திரேலியா தொடர், மீண்டும் பாகிஸ்தான், இந்தியா என மாறி மாறி போட்டிகளில் பங்கேற்க வேண்டியிருந்தது.
பாகிஸ்தான் தொடருக்கு பிறகு அப்போதைய உலக சாம்பியனை எதிர்கொள்ள சிறிது ஓய்வு கேட்டோம். ஆனால், கிரிக்கெட் சபை அதை நிராகரித்தது. இதனால், தொடரிலிருந்து நான் விலகிக்கொண்டேன். இதற்கு எனது நெருங்கிய நண்பர்களிடமிருந்தே விமர்சனங்கள் அதிகம் வந்தன.
1980 இல் கபில் தேவ் முழங்கால் காயத்தினால் தொடரிலிருந்து விலக, மேற்கிந்தியா அந்தத் தொடரை ரத்துச் செய்தது. தற்போது இது போன்ற நிலைமை காணப்படவில்லை. உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சோர்ந்துள்ள தோனி இலங்கைத் தொடரில் இருந்து ஓய்வு கேட்டுப் பெற்றிருப்பது பாராட்டி வரவேற்க வேண்டிய முதிர்ச்சியான முடிவு. இதனைப் பார்த்து பெருமைப்படவேண்டுமென்று தெரிவித்துள்ளார்.