ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது முகமது ஆசிப் ஊக்கமருந்து பயன்படுத்தியது சோதனையில் தெரிய வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டன. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடின. ஐ.சி.சி. விதிப்படி சுழற்சி முறையில் ஒவ்வொரு ஆட்டத்தின் போதும் குறிப்பிட்ட வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், ஐ.பி.எல். போட்டியின் போது நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் ஒருவர் சிக்கியிருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
உலக ஊக்கமருந்து தடுப்பு கழகம் இது தொடர்பாக ஐ.சி.சி. இந்திய கிரிக்கெட் ஐ.பி.எல். அமைப்புக்கு கடிதம் எழுதியிருக்கிறது. ஊக்கமருந்துச் சோதனையில் சிக்கிய வீரர் வேகப்பந்து வீச்சாளர் என்றும் இந்திய துணைக் கண்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கிரிக்கெட் இணையத்தளம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதன்படி பார்த்தால் தற்போதைய சூழலில் அது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆசிப்பாக இருக்கலாமென்று யூகங்கள் கிளம்பியுள்ளன. டில்லி டேர் டெவில்ஸ் அணிக்காக ஆடிய முகமது ஆசிப், போட்டியை முடித்து நாடு திரும்பிய போது டுபாயில் சிறியளவில் போதைப் பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். எனவே அவர் ஊக்கமருந்தை பயன் படுத்தியிருக்க அதிக வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.
ஏற்கனவே ஒருமுறை ஆசிப் ஊக்க மருந்து பிரச்சினையில் சிக்கி பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தண்டனைக்குள்ளாகியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், அவர் மீதான குற்றச்சாட்டை பாகிஸ்தான் சபை உடனடியாக மறுத்திருக்கிறது.
இதற்கிடையே இந்தத் தகவலை ஐ.பி.எல். தலைவர் லலித்மோடி உறுதிப்படுத்தியிருக்கிறார். 2 நாட்களுக்கு முன் சுவிற்சர்லாந்து ஊக்கமருந்து தடுப்பு கழகத்திலிருந்து அது தொடர்பாக தங்களுக்கு கடிதம் வந்ததாக அவர் கூறினார். ஒரு மாதிரிச் சோதனையில் ஊக்கமருந்து உபயோகப்படுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஐ.பி.எல். அடுத்து நடவடிக்கையில் இறங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.