இலங்கைக்கு எதிரான தொடரில் சிறப்பாக ஆடுவேனென்று சென்னை வந்த டெண்டுல்கர் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடவிருக்கிறது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடக்கிறது. 23 ஆம் திகதி முதலாவது டெஸ்ட் போட்டி கொழும்பில் தொடங்குகிறது.
இதற்கான கும்பிளே தலைமையிலான 16 பேர் கொண்ட இந்திய அணி வீரர்களுக்கு சென்னையில் நேற்று திங்கட்கிழமை ஒரு நாள் பயிற்சி முகாம் சேப்பாக்கம் மைதானத்தில் காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெற்றது. வீரர்கள் வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். இதையொட்டி வீரர்கள் அனைவரும் சென்னை வந்து விட்டனர். அவர்கள் தாஜ்கோரமண்டல் ஹோட்டலில் தங்கியுள்ளனர்.
காயம் காரணமாக பங்களாதேஷில் நடந்த முக்கோணத் தொடர் மற்றும் பாகிஸ்தானில் நடந்த ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்காத இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் காயத்திலிருந்து குணமடைந்து இலங்கை தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார். சென்னை வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது;
நான் முழு உடல் தகுதியை பெற்று விட்டேன். இலங்கைத் தொடரில் எனது சிறப்பான ஆட்டத்தையளிக்க ஆர்வமாக இருக்கிறேன். இந்திய அணி நல்ல போர்மில் உள்ளது. அத்தகைய நிலையைத் தொடர்ந்து வெளிப்படுத்தி இலங்கைத் தொடரில் வெற்றி பெற வேண்டுமென்று விரும்புகிறேன்.
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மென்டிஸுக்கு (ஆசிய போட்டியில் இந்தியாவை அதிர வைத்தவர்) எதிராக நான் விளையாடியது இல்லை. எனவே அவரது பந்து வீச்சு தொடர்பாக எந்தக் கருத்தையும் தெரிவிக்க மாட்டேன். நான் அங்கு தான் செல்ல விருக்கிறேன். இலங்கையில் வைத்து அவரை பார்த்துக் கொள்கிறேனென்றார்.
இந்திய அணி இன்று பிற்பகல் விமானம் மூலம் சென்னையிலிருந்து கொழும்புக்கு புறப்படுகிறது.